Jun 21, 2012

இலங்கை மத்ரஸாக்களின் இன்றைய நிலை (?)

Posted on 6:14 AM by ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் மருதமுனை

இஸ்லாமிய மார்க்கத்தை மக்களிடம் எத்தி வைக்க வேண்டும் என்பதற்காக பண்னெடுங் காலமாக நம் மத்தியில் பல அரபிக் கல்லூரிகள் தோற்றம் பெற்று பல்லாயிரக் கணக்கான ஆலிம்களை உருவாக்கியிருக்கிறது, உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

இந்தக் கல்லூரிகளின் நிலைமைகள், கொள்கைகளை மிகவும் ஆழமாகவும், தெளிவாகவும் பொது மக்கள் புரிந்து கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.
ஏன் என்றால் இன்று நமக்கு மத்தியில் மார்க்கப் பிரச்சாரத்திற்கு பாடுபடுவதாக பிதற்றிக் கொள்ளும் பல கல்லூரிகள் ஆலிம்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளாகத் தான் இருக்கின்றன என்பதே உண்மை.
வருடத்திற்கு இத்தனை பேரை உருவாக்கினோம், இந்த வருடம் இத்தனை பேர் பட்டம் பெற்றார்கள், இந்தனை பேர் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு தெரிவானார்கள் என்ற வரி விளப்பரத்திற்காக போராடும் பல கல்லூரிகள் நமக்கு மத்தியில் இருப்பதைப் பார்க்கிறோம்.
அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுவோர் அறிஞர்களே.அல்லாஹ் மிகைத்தவன் மன்னிப்பவன்.(35:28)
அல்லாஹ் உலகில் படைத்தவர்களில் மிகவும் அவனை அஞ்சுபவர்கள் அறிஞர்கள் தான் என்று இறைவன் மேற்கண்ட வசனத்தில் தெளிவுபடுத்துகிறான்.ஆனால் இன்றைய நிலையோ இதற்கு நேர் மாற்றமாக இருப்பதைப் பார்க்கிறோம்.
தங்களை அறிஞர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களுக்கும் இறையச்சத்திற்கும் தொடர்பிருக்கிறதா என்று சந்தேகப்படவேண்டியுள்ளது. தனது இளமைக் கல்வியை சிறந்த முறையில் மார்க்கத்தின் நிழலில்  அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் அரபிக் கல்லூரிகளைத் தேடி வரும் சிறார்கள் மார்க்கத்தின் பெயரால் ஏமாற்றுக் கல்வி புகட்டப்படுகிறார்கள்.
மட்டுமன்றி ஏமாற்றுக் கல்விக்கு வேட்டு வைக்கிறோம் என்று கிளம்மி ஏகத்துவக் கல்லூரிகள் நடத்துவதற்கு தயாரான எத்தனையோ பேர் அவற்றை தமது பிழைப்புக்குறிய வழியாக மாற்றியிருப்பதைக் காண முடிகிறது.
ஏழு வருடங்கள், ஐந்து வருடங்கள் என்று பாடத்திட்டத்தை அமைத்துள்ள எத்தனையோ மத்ரஸாக்கள் தனது கல்லூரி மாணவர்களுக்கு இஸ்லாத்தின் சரியான அடிப்படையைக் சொல்லிக் கொடுப்பதில்லை.
ஷாபி என்றும் ஹனபி என்றும் மத்ஹபுகளுக்கு வக்காளத்து வாங்கும் இவர்கள் மத்ஹபு தொடர்புடைய நூல்களைத் தான் பாடத்திட்டத்தில் கூட சேர்திருப்பார்கள்.இவர்களினால் உருவாக்கப்பட்டு வரும் இந்த மாணவர்களின் எதிர்காலம் என்னவாகிறது?
மரண வீட்டில் யாசீன் ஓதுவதும், காலத்திற்குக் காலம் மவ்லிது ஓதுவதும் தான் இவர்களின் பிழைப்பாக மாறுகிறது.
தவ்ஹீத் போர்வையில் உருவான அரபிக் கல்லூரிகளின் இன்றைய அவல நிலை (?)
மார்க்கத்தை அதன் தூய வடிவில் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக இலங்கைத் திரு நாட்டில் பல ஏகத்துவக் கல்லூரிகள் கால் பதித்தன. அவற்றில் பல தற்போது இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன என்பது தனிக்கதை.
சில கல்லூரிகள் இன்றிருந்தாலும் அவற்றின் சமூகப்பணி (?) பெரும் கவலையளிப்பதாகத் தான் இருக்கிறது.
தெளிவான மார்க்க அறிஞர்களாக மாணவர்களை உருவாக்குகிறோமோ இல்லையோ பி.ஏ பட்டதாரிகளாக மாற்றிவிட வேண்டும் என்பதே இந்தக் கல்லூரிகளின் நவீன பாடத்திட்டமாக இருக்கிறது.
பட்டதாரிகள் உருவாக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அது தான் முழு நேரப்பணியாக மாறி மார்க்கக் கல்வி பகுதி நேரமாக இந்த கல்லூரிகளில் மாறிவிட்டதே கவலையளிக்கிறது.
உங்களில் நம்பிக்கை கொண்டோருக்கும், கல்வி வழங்கப்பட்டோருக்கும் அல்லாஹ் பல தகுதிகளை உயர்த்துவான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.(58:11)
அல்லாஹ்விடத்தில் உயரிய தகுதியை நாம் அடைய வேண்டுமென்றால் அவனை நம்புவதைப் போல் அவனுடைய மார்க்கத்தையும் தெளிவாக அறிந்திருக்க வேண்டும் என்று மேற்கண்ட வசனம் நமக்கு எடுத்தியம்புகிறது.
ஆனால் இந்த மார்க்கக் கல்வியின் தேவை இன்று குழி தோண்டிப் புதைக்கப்படுவதை கண்முன் காணக்கூடியதாக இருக்கிறது.
அரபு நாட்டுப் பணத்தை நம்பி ஆரம்பிக்கப்பட்ட பல கல்லூரிகளை இன்று காணக்கிடைப்பதில்லை.ஒன்றிரண்டு ஆங்காங்கே இருந்தாலும் அவற்றிற்கும் மார்க்கப்பிரச்சாரத்திற்கும், கொள்கை உறுதிக்கும் தொடர்பில்லை.
பரகஹதெனிய அஸ்ஸலபிய்யா, மஹரகம கபூரிய்யா, காலியில் இருக்கும் இப்னு அப்பாஸ், பாலமுனை ஸஹ்வா போன்ற எத்தனையோ அரபிக் கல்லூரிகளை தவ்ஹீத் பேர் தாங்கி கல்லூரிகளாகவே எண்ணத் தோன்றுகிறது. 
குர்ஆனையும்,ஹதீஸையும் மாத்திரம் போதிப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்தக் கல்லூரிகளில் பெரும்பாலான பாடத்திட்டங்களில் மத்ஹபு நூல்களே குடி கொண்டுள்ளன.
இன்று வரைக்கும் பிக்கு, தப்ஸீர் என்று இவர்கள் எதைப் படித்துக் கொடுத்தாலும் அந்தப் பாடத்திட்டம் மத்ஹபு சார்ந்ததாகத் தான் இருக்கிறது.
பெயருக்கு குர்ஆன், ஹதீஸ் என்று பேனர் போட்டுக் கொள்வதுதான் இவர்களின் வேலையாக இருக்கிறது.
இஸ்லாமிய அகீதாவை சரியாக மக்கள் மத்தியில் எத்தி வைக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட இந்தக் கல்லூரிகளில் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மத்தியில் உள்ள தொடர்பைப் பார்த்தாலே இந்தக் கல்லூரிகளில் ஏகத்துவத்தின் நிலையை அடையாளம் காண முடியும்.
ஆசிரியர்களைக் கண்டால் ஆறுக்கு மடியும் மாணவர்கள், வகுப்பறைக்குள் ஆசிரியர் நுழையும் போது எழுந்து நிற்கப் பழக்கப்பட்டிருப்பதும் இவர்களின் தவ்ஹீதின்(?) உச்ச கட்டம் எனலாம்.
நபியவர்கள் வரும் போதே நபித் தோழர்கள் அமர்ந்த வண்ணம் தான் இருந்ததாக ஹதீஸ்கள் கூறுகின்றன ஆனால் இவர்கள் வரும் போது மாணவர்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று இந்தக் கல்லூரிகளின் சட்டம் சொல்கிறது.
ஸலபிகள் என்ற பெயரால் மூலைச் சலவை செய்யப்படும் இந்த அப்பாவி மாணவர்கள் இவர்களைப் போலவே குர்ஆன்,ஹதீஸ{டன் மூன்றாவதாக ஸலபிகளையும் ஆதாரங்களாக எடுக்கும் ஆத்மீகக் கொள்கையிலேயே வளர்க்கப்படுகிறார்கள்.
கொள்கையில்லை, கோட்பாடு இல்லை, கொண்ட கொள்கையில் தெளிவில்லை மக்கள் மத்தியில் சத்தியக் கொள்கையை உடைத்துச் சொல்ல தைரியமில்லை ஆனால் இவர்கள் கொள்கை பேசுவதில் வள்ளவர்களாம்.
இந்த தவ்ஹீத் பெயர் தாங்கி கல்லூரிகளின் அதிபர், ஆசான்கள் தங்கள் மத்ரஸா வளாகத்திற்குள் பள்ளியைக் கட்டி வைத்துக் கொண்டு பித்அத் வாதியின் பள்ளிக்கு ஜும்மாவிற்கு தாங்களும் சென்று தங்கள் மாணவர்களையும் அழைத்துச் செல்கிறார்கள். தங்கள் மத்ரஸாவில் இருக்கும் பள்ளியில் ஒரு ஜும்ஆ நடத்துவதற்கு இவர்களுக்கு திராணியில்லாமல் போய்விட்டது தான் கவலை.
என்று நீங்குமோ இந்த அவல நிலை.
நாம் அறிந்தவரை காலி இப்னு அப்பாஸ் போன்ற மத்ரஸாக்களில் இன்னும் மத்ரஸா வளாகத்தில் ஜும்மா தொழுகை கிடையாது. மார்க்கத்திற்கு முரனான, பித்அத் நடக்கும் பள்ளியில் தான் இது வரைக்கும் அவர்கள் ஜும்மா தொழுகிறார்கள் என்பதே உண்மை.
தவ்ஹீத் வாதிகளாக தம்மை காட்டிக்கொள்ள முயலும் இந்த மத்ரஸாவின் ஆசிரியர் குழாமும், நிர்வாகமும் உண்மையில் ஜமாத்தே இஸ்லாமியை ஆதரிக்கும் போலி தவ்ஹீத் வாதிகள் என்பதே உண்மை.
தங்கள் கல்லூரிகளின் பட்டமளிப்பு விழாக்களுக்கு விஷேட அதிதிகளாக ஜமாத்தே இஸ்லாமியின் அமீரை அழைத்து விருந்து வைப்பதும், தங்கள் இணையதளங்களில் அவர்களின் ஆசிச் செய்திகளை வெளியிடுவதும், அவர்களின் கல்லூரிகளில் இவர்களும் சென்று பகுதி நேர பாடம் நடத்துவதும் தற்போது வழமையாகிவிட்ட கதைதான்.
தங்கள் பிழைப்புக்காக ஒரு காலத்தில் கத்தம், பாத்திஹா ஓதிய மவ்லவிமார்களைப் பார்த்தோம்.
தங்கள் பிழைப்பிற்காக கொண்ட கொள்கையையே அடகு வைப்பவர்களை தற்காலத்தில் பார்க்கிறோம். இவர்களின் இந்த செயல்பாட்டால் மீண்டும் மத்ஹபு கொள்கைக்கு வக்காலத்து வாங்கும் மவ்லவிமார்கள் உற்பத்தி செய்யப்படுகிறார்களே தவிர குர்ஆன் சுன்னாவை பேசுபவர்கள் களத்தில் இருப்பது அரிதாகவே உள்ளது.
தூய இஸ்லாத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் மேலிடுகின்ற காரணத்தினால் தான் பல சகோதரர்கள் தங்கள் பிள்ளைகளையும் அரபிக் கல்லூரிகளில் சேர்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, பல சிரமங்களுக்கு மத்தியிலும் பிள்ளைக்காக செலவு செய்கிறார்கள்.
ஆனால், இப்படி அவர்கள் செலவு செய்வதற்குறிய பலன் கிடைப்பதென்பது மிக மிக அரிதாகத்தான் உள்ளது. காரணம் மத்ரஸாக்கள் தங்கள் திட்டங்களை செயல்படுத்துவதில் விடும் பிழைகள், அல்லது பிழையான திட்டங்கள் என்றுகூட சொல்ல முடியும்.
சிறந்த பிரச்சாரகர்களை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட கல்லூரிகளின் திட்டங்கள் கூட சரியான இஸ்லாமிய அகீதாவின் அடிப்படையில் இல்லை என்பதே உண்மை.அது மட்டுமின்றி இன்னும் சில கல்லூரிகள் தங்கள் முழு நேர பணியாக உலகக் கல்வியைத் தான் முக்கியத்துவப்படுத்துகிறார்களே தவிர மார்க்கக் கல்வியை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக சரியான முறையில் அதற்கான திட்டங்களைத் தீட்டவும் இல்லை செயல்படுத்தவும் இல்லை.
உலகக் கல்வி எங்கள் கல்லூரியில் இருக்கிறது என்பதை வெளிக்காட்டுவதற்காக செய்யும் விளம்பரத்தின் பாதியைக் கூட சரியான கொள்கை அடிப்படையில் மார்க்கக் கல்வியையும் நாம் மாணவர்களுக்கு கொடுக்கிறோம் என்று விளம்பரப்படுத்தவில்லை. சில கல்லூரிகள் அப்படி விளம்பரம் செய்தாலும் கல்லூரி நிர்வாகத்தையும், ஆசிரியர்களையும் கவணித்தாலே மார்க்கக் கல்வியில் இவர்கள் எடுத்து வைக்கும் முதல் படியே தவறு என்பது வெளிச்சமாகிவிடுகிறது.
நிர்வாகச் சட்டத்திற்காக மார்க்கத்தை புறக்கணிக்களாமா?
மார்க்கம் போதிக்கும் கல்லூரிகளாக இன்று மக்கள் மத்தியில் இனம் காணப்பட்டுள்ள பல கல்லூரிகள் தங்களின் நிர்வாகச் சட்டத்திற்காக மார்க்கச் சட்டங்களையே புறந்தள்ளி விடுவதைப் பார்க்கிறோம்.
மார்க்கத்தை முற்படுத்தி கல்லூரியின் நிர்வாகச் சட்டம் தவறாக இருக்கிறது என்று யாராவது சுட்டிக்காட்டினால் அந்த மாணவன் கல்லூரியை விட்டே நீக்கப்படுகிறான். அல்லது இதன் பின்பு கல்லூரியின் சட்டத்திற்கு மாற்றம் செய்யமாட்டேன் என்று பெற்றோர் முன்னிலையில் கடிதம் எழுதிக் கேட்டு மீண்டும் சேர்த்துக் கொள்ளப்படுகிறான். இதை எந்தக் கல்லூரி நிர்வாகமும் மறைக்கவோ, மறுக்கவோ முடியாது.
மார்க்கத்தை நடைமுறைப் படுத்துவதற்காகத் தான் மத்ரஸாக்களே என்றால் அந்த மார்க்கத்தை பேசியதினால் மாணவர்களுக்கு இப்படிப்பட்ட நிலை என்பது மிகவும் பெரிய சோகக் கதைதான்.
அரபியில் மேதைகள்(?) மார்க்கத்தில் பேதைகள். 
மார்க்கத்தை சரியாக புரிய வேண்டும் என்பதற்காக மத்ரஸாக்களில் இணையும் பல மாணவர்களுக்கு அரபி பாசையை படித்துக் கொடுக்கிறார்கள். ஆனால், அந்த பாசையின் மூலம் சரியான கொள்கையை எப்படி அடையாளம் காண்பது என்பதைப் பற்றி அதிகமான கல்லூரிகள் கற்றுக் கொடுப்பதில்லை.
உதாரணத்திற்கு இன்றிருக்கும் கல்லூரிகளில் பல கல்லூரிகள் அரபி சஞ்சிகைகளை மொழியாக்கம் செய்வதற்கும், அரபியில் கட்டுரைகள் எழுதுவதற்கும் பயிற்சிகள் கொடுக்கிறார்கள். கண்டிப்பாக செய்ய வேண்டிய ஒன்றுதான் ஆனால், இதை விடவும் முக்கியம் அரபி பாசையைப் படித்த மாணவன் மிகத் தெளிவாக குர்ஆனையும், சுன்னாவையும் விளங்க வேண்டும் என்பது.
இதற்கான வழிகாட்டுதல்கள் எத்தனை மத்ரஸாக்களில் கொடுக்கப்படுகிறது என்பதை ஆராய்ந்து பாருங்கள்.
தங்கள் யாரை தக்லீத் (தனிமனித வழிபாடு) செய்கிறார்களோ அந்த அறிஞர்களின் கருத்துக்கள் மக்கள் மத்தியில் போய்ச் சேர வேண்டும் என்பதற்காக அல்லது தமது கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் குறிப்பிட்ட அறிஞர்களின் கருத்துக்களை எதிர்க்கக் கூடாது அதை அப்படியே எடுத்து நடக்க வேண்டும் என்பதற்காக மூலைச் சலவை செய்யப்படுவதைப் பார்க்கிறோம்.
பேருவலையில் அமைந்திருக்கும் ஜாமியா நளீமியா போன்ற கலாசாலைகளும், மாதம்பையில் அமைந்துள்ள இஸ்லாஹிய்யா போன்ற மத்ரஸாக்களும், ஸவூதிய முப்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தவ்ஹீத் மத்ரஸாக்களும் இதற்கு சிறந்த உதாரணங்களாகும்.
(மத்ரஸாக்களில் ஒழுக்க விழுமியங்கள் தொடர்பாக பல பிரச்சினைகள் இருந்த போதிலும் எதிர்கால இலங்கை முஸ்லீம்களின் நிலையைக் கருத்தில் கொண்டு அவற்றை எழுத்தில் கொண்டுவருவதைத் தவிர்க்கிறோம்)
பெண்கள் கல்லூரிகளும், புரிய வேண்டிய செய்திகளும்.
ஆண்கள் கல்லூரிகளின் தற்கால நிலையைப் பற்றிய செய்திகளை தெரிந்து கொள்வதோடு பெண்கள் கல்லூரிகளினதும் உண்மை நிலை பற்றி நாம் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.
பெண்கள் மத்தியில் இருக்கும் மூடத்தனத்தை இல்லாமலாக்கி, மார்க்கத்தின்பால் அவர்களை விழிப்புணர்வூட்டி சமுதாயத்தில் சிறந்த வழிகாட்டிகளாக அவர்களை ஆக்க வேண்டும் என்பது கட்டாயக் கடமையாகும். அந்தக் கடமையை சரிவர செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் பெண்கள் கல்லூரிகளும் உருவாக்கப்பட்டது. அப்படி உருவாக்கப்பட்ட கல்லூரிகளின் நிலைகளோ மிகவும் கவலைக்கிடமாகத்தான் இருக்கிறது.
பெண்கள் கல்லூரிகளில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக பேசப்படுபவைகள் சிலவைகள் தாம். அந்த சில கல்லூரிகளில் கூட பல பிரச்சினைகளும், ஆண்கள் கல்லூரிகளின் இருக்கும் அகீதா ரீதியிலான சிக்கல்களைப் போன்ற பல செய்திகளும் உள்ளடக்கம்.
பெண்கள் கல்லூரி என்றவுடன் அநேகருக்கு நினைவிற்கு வருவது கல்லெளியவில் அமைந்திருக்கும் பெண்கள் கல்லூரிதான். இந்தக் கல்லூரி பல வருடங்களாக இயங்கிய போதும் இதிலிருந்து வெளியேறிய ஆலிமாக்களில் விரல் விட்டு எண்ணப்படும் அளவிற்குள்ளவர்களைத் தவிர வேறு யாரையும் பிரச்சாரக் களத்தில் காண முடியவில்லை.
அப்படி பிரச்சாரக் களத்தில் இருப்பவர்கள் கூட மார்க்க விஷயத்தில் சரியான தெளிவில்லாதவர்களாகத்தான் இருக்கிறார்கள்.
நான் தவ்ஹீத்வாதி, சொல்லும் சட்டம் மத்ஹபுக்குறியது என்பதுதான் இவர்களின் நிலையாக உள்ளது.
இது தவிர மல்வானை பின் பாஸ் பெண்கள் கல்லூரி, ஆயிஷா ஸித்தீகா பெண்கள் கல்லூரி, இஸ்லாஹிய்யா பெண்கள் கல்லூரி போன்றவற்றின் நிலையும் இது போன்றதுதான்.
(பேர் குறிப்பிடாத இன்னும் பல கல்லூரிகளினதும் நிலை இதுதான். வட கிழக்கு மாகாணம், தென் மாகாணம் போன்ற பகுதிகளில் இதே நிலையில் பல கல்லூரிகள் காணப்படுகின்றன).
படித்தவர்களில் பலர் களத்தில் இல்லை, இருப்பவர்களில் பலருக்கு இஸ்லாமியத் தெளிவு இல்லை.
சிறந்த தாய் என்ற கோஷம்.
சிறந்த தாயையும் மிகச் சிறந்த பிரச்சாரகரையும் உருவாக்கப் போகிறோம் என்ற நோக்கில் தான் மேற்கண்ட கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டன, காலப் போக்கில் இரண்டும் கெட்டான் நிலைதான் உருவாகியுள்ளது.
சிறந்த தாய் கோஷத்தில் உருவாக்கப்பட்ட கல்லூரிகளில் எத்தனையோ கல்லூரிகள் ஒழுக்கத்திலேயே கேள்விக் குறியாக உள்ளன என்பது ஒரு கசப்பான உண்மையாகும்.
மார்க்கத்திற்கு மாற்றமாக பாடத்திட்டங்கள்.
ஆண்கள் கல்லூரிகளைப் போலவே பெண்கள் கல்லூரிகளினதும் பாடத்திட்டங்கள் மத்ஹபை அடிப்படையாகக் கொண்டவைகளாகத் தான் இருக்கின்றன.
எந்த மத்ஹபுகள் குப்பைகள் என்று சொன்னார்களோ அதே குப்பைகளை பாடத்திட்டத்தில் வைத்திருப்பது கவலைக்குறியதே!
ஆண்களே கேட்க சகிக்காத கருத்துக்கள் நிறைந்திருக்கும் இத்தகைய நூல்களை பாடத்திட்டத்தில் வைத்துவிட்டு சிறந்த தாயை உருவாக்கப் போகிறோம் என்று தாளம் போடுவது எந்த விதத்தில் நியாயம்?
அது மாத்திரமன்றி சில கல்லூரிகளில் நபியவர்களின் ஹதீஸ்களைப் பற்றிய சிறு ஞானம் கூட இல்லாத பாடத்திட்டம் வகுக்கப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது.
அரபிக் கல்லூரிகளும், ஆசிரியர்களும்.
மாணவர்கள் சிறந்த சமுதாயமாக உருவாக்கப்பட வேண்டுமாயின் கல்வி கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்கள் மார்க்க விஷயத்தில் தெளிவுள்ளவர்களாகவும், திறமையானவர்களாகவும் இருப்பது கட்டாயமாகும். இன்றைக்கு நம்மத்தியில் இருக்கும் ஆண்கள் கல்லூரிகளானாலும், பெண்கள் கல்லூரிகளானாலும் அவற்றில் கல்வி கற்றுக் கொடுக்கும் பெரும்பாலான ஆரியர்களுக்கு மார்க்கத்தில் தெளிவில்லை என்பதே உண்மை இது கல்லூரி நிர்வாகம் மறுத்தாலும், மறைத்தாலும் இதுதான் உண்மை.
வெளிநாட்டு மத்ரஸாக்களில் பட்டம் பெற்றவர்களை நாங்கள் ஆசிரியர்களாக வைத்திருக்கிறோம் என்று பறைசாற்றும் எத்தனையோ கல்லூரிகள் இன்னும் மத்ஹபு குப்பைகளிலும், அரபி உலமாக்களினது ஆக்கங்களிலுமே தமக்குத் தேவையான மார்க்க ஆதாரங்களைத் தேடுகின்றனவே தவிர குர்ஆன், ஹதீஸில் தேடுவதில்லை.
கல்லூரி நிர்வாகத்தினரே!
மத்ரஸாக்களை நடத்தும் கல்லூரி நிர்வாகிகளே !
உங்கள் நோக்கம் தூய்மையானதாக இருந்தால், சரியான கொள்கை அடிப்படையில் அமைந்த பாடத்திட்டத்தை நடை முறைப்படுத்துங்கள், மார்க்கக் கல்வியில் தேர்ச்சி பேற்ற தூய இஸ்லாத்தை அதன் தூய வடிவில் பரப்ப வேண்டும் என்ற நன்நோக்கம் கொண்டவர்களை ஆசிரியர்களாக நியமனம் செய்யுங்கள். இன்றில்லாவிட்டாலும் எதிர்காலத்திலாவது சரியான கொள்கைகளைப் பேசும் ஆலிம்கள் தோற்றம் பெருவதற்கு அது ஒரு அடிப்படையாக அமையும் இன்ஷா அல்லாஹ்.

No Response to "இலங்கை மத்ரஸாக்களின் இன்றைய நிலை (?)"

Leave A Reply

Powered by Blogger.